அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு,

துல்கஃதா தலைப்பிறை

Monday, September 2, 2013

துல்கஃதா தலைப்பிறை பார்த்தலை இலகுபடுத்தல்

துல்கஃதா தலைப்பிறை பார்த்தலை இலகுபடுத்தல்

இலங்கையில் தலைப்பிறை பார்த்தலும் அதனைக் கொண்டு புதிய மாதத்தை ஆரம்பிதத்தலும் எனும் விடயம் சர்ச்சைகளோடு தொடர்ந்து கொண்டிருப்பதனை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைக்கு முத்தாய்ப்பு இடுவதற்கு என்னாலான பங்களிப்பைச் செய்வதற்கான ஒரு முயற்சியே இதுவாகும்.

இம்முறை ஹி 1434 துல்கஃதா மாதத்திற்கான தலைப்பிறை எவ்வாறு தோற்றம் தரப் போகின்றது என்பதனை பருமட்டான வரைபடமாக வரைந்து இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். முடியுமானவர்கள் இந்தத் தகவல்களை உங்களது நண்பர்கள் உறவினர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

இங்கே இலங்கையின் கிண்ணியா நகரின் அமைவிடத்துக்காக இக்கணிப்பீடுகளும் வரைபும் மேற்கொள்ளளப்படுகின்றன.

இவ்வருடம் ஷவ்வால் மாதத்தின் 29ம் நாள் 06.09.2013ம் திகதி வெள்ளிக் கிழமையாகும். இத்தினம் தலைப்பிறை பார்ப்பதற்குரிய நாளாகும்.

ஷவ்வால் மாதத்தின் இறுதியில் ஏற்படும் அமாவாசை கிண்ணியா நகரில் வியாழக்கிழமை (05) மாலை 06.42 மணிக்கு இடம்பெறுகின்றது. அன்றைய தினம் கிண்ணியாவில் சூரிய அஸ்த்தமனம் மாலை 06.11 மணிக்கும் சந்திர அஸ்த்தமனம் மாலை 06.00 மணிக்கும் இடம்பெறுகின்றது. அதாவது சூரியன் மறைவதற்கு 11 நிமடங்கள் முன்னதாகவே சந்திரன் மறைந்துவிடுகின்றது. ஆதலால் 05ம் திகதி வியாழக் கிழமை துல்கஃதா தலைப்பிறை தென்பட முடியாதாகும். கிண்ணியாவில் மட்டுமல்ல உலகில் எந்தப் பகுதியிலும் இத்தினத்தில் அவ்வப்பகுதிகளின் சூரிய அஸ்த்தமனத்துக்குப் பின்னர் தலைப்பிறை தென்பட முடியாது.

06ம் திகதி வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் சூரிய அஸ்த்தமனம் மாலை 06.11 மணிக்கும் சந்திர அஸ்த்தமனம் மாலை 06.43 மணிக்கும் இடம்பெறுகின்றது. அதாவது சூரியன் அஸ்தத்தமித்ததன் பின்னர் 33 நிமிடங்கள் சந்திரன் கிண்ணியாவின் மேற்கு வானில் பயணம் செய்யும்.

உங்களது கடிகாரம் இலங்கையின் நியம நேரத்தைச் சரியாகக் காட்டுகின்றதா என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

திசையறி கருவி ஒன்றையும், நீங்கள் காணும் தலைப்பிறையை ஒளிப்படம் எடுப்பதற்கு தயாராக ஒரு ஒளிப்படக் கருவியையும் முடியுமானவர்கள் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். (திசையறி கருவியை தற்காலத்தில் கைத்தொலைபேசிகளில் download செய்து கொள்ளலாம்.)

உச்சி வானில் இருந்து தொடுவானம் வரையான கோணம் 90 பாகை என்பதனைக் அளவிடையாகக் கருத்தில் கொண்டு மேற்கு வானத்தை கூறுகளாகப் பிரித்துக் கொண்டு தலைப்பிறை பார்ப்பதற்குத் தயாராகுங்கள்.

நீங்கள் நிற்கின்ற புள்ளியை தரையில் அடையாளமிட்டுக் கொள்ளுங்கள். திசையறி கருவி வைத்திருப்பவர்கள் நீங்கள் நிற்கின்ற புள்ளியில் திசையறி கருவியை வைத்து திசைகாட்டி மேற்குத் திசையைக் குறித்துக் கொள்ளுங்கள்.

தொடுவானில் திசைகாட்டி மேற்குத் திசையில் இருந்து உங்களுக்கு வலப் புறமாக (வடக்கு நோக்கி) சூரியன் மறைவதனை அவதானியுங்கள். சூரியன் மறைகின்றபோது அந்தப் புள்ளியை ஒரு மரம் அல்லது நட்சத்திரம் அல்லது ஒரு தடியைக் கொண்டு அடையளமிட்டுக் கொள்ளுங்கள். திசை காட்டி மேற்கிலிருந்து சூரியன் மறைகின்ற புள்ளி 6.5 பாகையாகும்.

சூரியன் மறைகின்ற கணத்தில் சந்திரனானது திசைகாட்டி மேற்கிலிருந்து உங்களுக்கு இடது புறமாக (தெற்கு நொக்கி) 3 பாகை தூரத்திலும், தொடுவானிலிருந்து 7 பாகை உயரத்திலும் அமைந்திருக்கும்.

அதாவது திசைகாட்டி மேற்கிலிருந்து வடக்காக சூரியன் அஸ்த்தமிக்கின்ற புள்ளிக்கு இடைப்பட்ட தூரத்தைப் போல அரைவாசித் தூரம் தெற்காகவும், முழுத் தூரமளவு உயரத்திலும் சந்திரன் அமைந்திருக்கும்.

தலைப்பிறை இலகுவாக வெற்றுக் கண்களுக்கு தென்படக் கூடிய அதி உச்சமான சிறப்பு நேரம் மாலை 06.25 மணியாகும். இந்தக் கணத்தில் சூரியன் அஸ்த்தமிக்கும் போது அமைந்திருந்த இடத்திலிருந்து தாழ்வாக 3.5 பாகை உயரத்தில் அமைந்திருக்கும். இது சூரியன் அஸ்த்தமிக்கும் போது சந்திரன் அமைந்திருந்த உயரத்தின் அரைவாசியாகும்.

மேலதிக விபரத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் வரைபடங்களைப் பார்க்கவும்.

குறிப்பு.
1. சூரியன் அஸ்த்தமிப்பதற்கு முன்னர் (மாலை 06.11) தலைப்பிறை தென்பட முடியாது.
2. சந்திரன் அஸ்த்தமித்ததன் பின்னர் (மாலை 06.43) தலைப்பிறை தென்பட முடியாது.
3. சூரியன் மறைந்த புள்ளிக்கு வலப்புறமாக தலைப்பிறை தென்பட முடியாது.
4. திசைகாட்டி மேற்குத் திசைக்கும் சூரியன் மறைந்த புள்ளிக்கும் இடைப்பட்ட வானில் தலைப்பிறை தென்பட முடியாது.

மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்டு தலைப்பிறை பார்ப்பதனை திருத்தமாக்கிக் கொள்ளுங்கள். தலைப்பிறை தென்பட்டால் இரண்டு விடயங்களைச் செய்யுங்கள்.
1. தீர்மானம் எடுப்பதற்காக தலைமைப் பீடத்திற்கு நேரகாலத்தோடு ஆதாரங்களுடன் அறியத்தாருங்கள்.
2. தென்பட்ட தலைப் பிறையை ஒளிப்படம் எடுத்தவர்கள் அப்படங்களை caf.org@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்களது ஒளிப்படக் கருவியின் மாதிரியை குறித்தனுப்ப மறக்க வேண்டாம்.
Dr. Aqil Ahmad S.